வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2வது டெஸ்டில், இந்தியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 631 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் டோனி 144 ரன், லஷ்மண் ஆட்டமிழக்காமல் 176 ரன் விளாசினர். கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த இந்தியா, முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 346 ரன் எடுத்திருந்தது. கம்பீர் 65, சேவக், சச்சின் தலா 38, டிராவிட் 119, இஷாந்த் (0) ஆகியோர் ஆட்டமிழந்தனர்.
இந்த நிலையில் லஷ்மண் (73), யுவராஜ் (0) இருவரும் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். யுவராஜ் 25 ரன் எடுத்து சம்மி வேகத்தில் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து, லஷ்மணுடன் கேப்டன் டோனி ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சிதறடித்தனர். டோனி 13 மற்றும் 16 ரன் எடுத்திருந்தபோது கெமார் ரோச் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் பிடிபட்டார். எனினும், இரண்டு முறையும் ‘நோ பால்’ ஆக அமைந்ததால் அவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
பொறுப்புடன் விளையாடிய லஷ்மண் டெஸ்ட் போட்டிகளில் தனது 17வது சதத்தை பூர்த்தி செய்தார். மறு முனையில் அதிரடியில் இறங்கிய டோனி பவுண்டரியும் சிக்சருமாக விளாசி, டெஸ்டில் தனது 5வது சதத்தை பதிவு செய்தார். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் திணறினர். டோனி & லஷ்மண் ஜோடி 7வது விக்கெட்டுக்கு 224 ரன் சேர்த்து அசத்தியது.
டோனி 144 ரன் எடுத்து (175 பந்து, 10 பவுண்டரி, 5 சிக்சர்) ஆட்டமிழந்தார். இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 631 ரன் என்ற ஸ்கோருடன் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. லஷ்மண் 176 ரன் (280 பந்து, 12 பவுண்டரி), அஷ்வின் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் சம்மி, ரோச் தலா 2, பிடல், பிஷூ, பிராத்வெய்ட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ், 2 விக்கெட் இழப்புக்கு 34 ரன் எடுத்த நிலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பரத் 1, பிராத்வெய்ட் 17 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். கிர்க் எட்வர்ட்ஸ் 12, பிராவோ 4 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.