உத்தரப்பிரதேசத்தை நான்காகப் பிரிக்கும் தீர்மானம், சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்போவதாக, முதல்வர் மாயாவதி அறிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில், 80 லோக்சபா தொகுதிகளும், 403 சட்டசபைத் தொகுதிகளும் உள்ளன. இந்த மாநிலத்தின் மக்கள் தொகை 19 கோடி. நாட்டின் ஜனத் தொகையில், 16 சதவீதம் பேர் இங்கு தான் உள்ளனர்.மிகப்பெரிய மாநிலமான உ.பி., ஏற்கனவே, இரண்டாகப் பிரிக்கப்பட்டு, பாரதிய ஜனதா ஆட்சியில், உத்தரகண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது. தற்போது, இந்த மாநிலத்தை, மேலும் நான்காகப் பிரிக்க, மாயாவதி திட்டமிட்டுள்ளார். ஆனால், எதிர்க்கட்சியான சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள், இந்த திட்டத்தை எதிர்க்கின்றன.
இது குறித்து, லக்னோவில், நிருபர்களிடம் மாயாவதி கூறியதாவது:சட்டசபை கூட்டத் தொடர், வரும் 21ம்தேதி துவங்குகிறது. சிறிய மாநிலம் மற்றும் மாவட்டமாக இருக்கும் போது தான், அதன் நிர்வாகம் நன்றாக இருக்கும் என அம்பேத்கர் கூறியுள்ளார். அவரது கருத்தை செயல்படுத்தும் விதத்தில், பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சிக்கு வரும் போதெல்லாம், புதிய மாவட்டங்களை உருவாக்குவது வழக்கம். இதே போல, இந்த மாநிலத்தை நான்காகப் பிரித்து, பூர்வாஞ்சல், பண்டல்கண்ட், அவாத் பிரதேஷ், பச்சிம் பிரதேஷ் ஆகிய மாநிலங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்.
நான்கு மாநிலங்களை உருவாக்குவதற்குரிய தீர்மானம், வரக்கூடிய சட்டசபை கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. புதிய மாநிலங்களை உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி, மத்திய அரசை வற்புறுத்துவோம்.நாட்டின் பெரும்பாலான பிரதமர்கள், இந்த மாநிலத்திலிருந்து தேர்வானவர்கள் தான். இருப்பினும், இந்த மாநிலம், ஒட்டுமொத்தமாக வளர்ச்சியடையவில்லை. மாநிலத்தின் அனைத்து வளர்ச்சிக்கான சிறப்புத் திட்டத்துக்கு, கணிசமான நிதி ஒதுக்கும் படி கேட்டோம். ஆனால், இந்த விஷயத்தில், மத்திய அரசு சாதகமான நடவடிக்கை எடுக்கவில்லை.இவ்வாறு, மாயாவதி கூறினார்.
No comments:
Post a Comment