அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க உதவும் மூலப் பொருளான யுரேனியத்தை, இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான தடையை நீக்க, ஆஸ்திரேலியா முன்வந்துள்ளது. ஆஸி.,யின் இந்த முடிவை, இந்தியா வரவேற்றுள்ளது.
இந்தியா, அணுமின் உலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பதில், கடந்த பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள், இந்தியாவுக்கு அணுமின் தயாரிப்புக்குத் தேவையான யுரேனியத்தை வினியோகிக்க பல நிபந்தனைகள் விதித்தன.அவற்றில் ஒன்று தான், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தின்படி, 1967க்கு முன், அணு ஆயுதப் பரிசோதனைகள் மேற்கொண்ட நாடுகள் மட்டுமே, அணு ஆயுதங்கள் வைத்திருக்கலாம் என அந்த ஒப்பந்தம் கூறுகிறது.
இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து விட்டது. இந்தப் பட்டியலில், பாகிஸ்தான், இஸ்ரேல், வடகொரியா நாடுகளும் உண்டு.
ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாததால், இந்தியாவுக்கான யுரேனியம் ஏற்றுமதிக்கு, ஆஸ்திரேலியா தடை விதித்தது.
இந்நிலையில், ஆஸி.,யைச் சேர்ந்த "தி ஏஜ்' பத்திரிகையில், கில்லார்டு நேற்று எழுதியுள்ள கட்டுரை ஒன்றில், அடுத்த மாதம், சிட்னியில் நடக்க உள்ள ஆளும் தொழிலாளர் கட்சியின் கூட்டத்தில் பேச வேண்டிய சில முக்கியமான விஷயங்களில், இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்வதையும் குறிப்பிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, நேற்று அவர் அளித்த பேட்டியில்,"இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்வது குறித்த தனது கொள்கையை, தொழிலாளர் கட்சி மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்த ஏற்றுமதியால் ஆஸி., பொருளாதாரம் மேம்படும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்' என்றார்.
No comments:
Post a Comment