Monday, November 14, 2011

உத்தர பிரதேச மாநிலத்தில் இன்று தேர்தல் பிரசாரம் துவக்குகிறார் ராகுல்



உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரத்தை, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், இன்று துவக்குகிறார். உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ., ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன. பகுஜன் சமாஜ் தலைவரும், தற்போதைய முதல்வருமான மாயாவதி ஏற்கனவே தன் பிரசாரப் பயணத்தை துவங்கிவிட்டார்.
சமாஜ்வாடி தரப்பில், முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ், மக்களின் ஆதரவு கேட்டு யாத்திரை மேற்கொண்டுள்ளார். அதேபோல, பா.ஜ., தரப்பில், உமாபாரதி களமிறங்கியுள்ளார். இந்நிலையில், காங்., பொதுச் செயலர் ராகுல், இன்று முதல் தீவிர பிரசாரத்தை துவங்குகிறார்.
இதற்காக, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில், ராகுலை வரவேற்று, போஸ்டர்களும், பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள புல்புர் தொகுதியில் இருந்து பிரசாரத்தை துவங்கும் ராகுல், பயணத்தின் போது மாயாவதி அரசில் நடக்கும் ஊழல்கள், முறைகேடுகள் குறித்து மக்களிடம் விளக்கத் திட்டமிட்டுள்ளார்.
ஏற்கனவே, பீகார் சட்டசபைத் தேர்தல் தோல்வியில் இருந்து படிப்பினை பெற்றுள்ள ராகுல், இந்த முறை மக்களின் கோரிக்கைகளை முன்னிறுத்தியும், ஆட்சி மாற்றம் தேவையென வலியுறுத்தியும், பிரசாரம் மேற்கொள்வார் என காங்., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment