Monday, November 14, 2011

வெள்ள நிவாரண பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர்களுக்கு உத்தரவு


வெள்ள நிவாரண பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு  முதல்வர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்.  
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் 2 நாள் மாநாடு, கோட்டையில்  நேற்று காலை  தொடங்கியது. மாநாட்டில் முதல் நாளில் கலெக்டர்கள், போலீஸ் உயர்  அதிகாரிகளின் கூட்டுக் கூட்டம்  நடந்தது. தலைமைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கி வரவேற்றார். 
மாநாட்டை தொடங்கி வைத்து ஜெயலலிதா பேசியதாவது: சிறப்பான நிர்வாகத்தை அளிப்பதில் ஊழல் தடையாக இருக்கிறது என்பதை நிர்வாகத்தில் இருப்போர் புரிந்து கொள்ள வேண்டும். சிறப்பான சேவையை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.  எனவே, மக்களின் தேவையை உணர்ந்து பணியாற்ற வேண்டும். வேளாண்மை, உள்ளாட்சி நிர்வாகம், சுகாதாரம், கல்வி, நலத்திட்டங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக எஸ்.சி., எஸ்.டி., பிசி., எம்.பிசி., பிரிவு மக் களுக்கான நலத்திட்டங்களில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
வறுமை ஒழிப்பு, கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையிலான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஆண்&பெண் சரி நிகர் வருமானம், பாலின வேற்றுமைகளை சமன் செய்தல், திறன் வளர்த்தல் மற்றும் வேலை வாய்ப்புகளை  உருவாக்குதல் போன்றவற்றில் முழுகவனம் செலுத்த வேண்டும். விவசாயத் துறையில் 2வது பசுமைப்புரட்சி ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் வரும் 5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானம் 3  மடங்காக அதிகரிக்கும்.  
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் பொதுவிநியோக திட்டத்தில் மானிய விலையில் பல்வேறு பொருட்கள் வழங்கப்படுகிறது. அவை மக்களுக்கு கிடைக்கிறதா என்பதை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். அதைப் போல  போலி ரேஷன் அட்டைகள் இருந்தால் அவற்றை கண்டுபிடித்து ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். 
கழிப்பிட வசதிகள், குடிதண்ணீர் வசதிகள், தங்கும் விடுதிகள் மற்றும் பள்ளிகள் நிலவரம் குறித்து மாவட்ட கலெக்டர்கள் அடிக்கடி ஆய்வுகள் செய்து மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மற்றும் பிற்படுத்தப் பட்ட மாணவர்களுக்கான புதிய தங்கும் விடுதிகள் கட்டுவதற்கான இடங்களை மாவட்ட கலெக்டர்கள் கண்டறிந்து உரிய துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.
சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு; அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை சிறப்பான முறையில் கையாண்டு சமாளித்தோம். தற்போது மேற்கொள்ளப்பட்டது தற்காலிக நடவடிக்கைகள் தான் என்றாலும் மழைக்காலம் முடிந்த பிறகு பிரச்னை களுக்கு நிரந்தர தீர்வு காண விரைந்து பணிகளை முடிக்க வேண்டும். திருமண உதவி, முதியோர் உதவி மற்றும் அரசின் சமூக நலத்திட்டங்கள் உரிய பயனாளிகளை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
2ம் நாள் மாநாடு:  இன்று  2ம் நாள் மாநாடு நடக்கிறது. இதில்,  கலெக்டர்கள் மற்றும்  போலீஸ் அதிகாரிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடக்கிறது.

No comments:

Post a Comment