Sunday, November 13, 2011

ஹாக்கி: இந்தியாவுக்கு வெண்கலம்



லால் பகதூர் சாஸ்திரி ஹாக்கி தொடரில், மூன்றாவது இடம் பெற்ற இந்திய பெண்கள் அணி வெண்கலப்பதக்கம் கைப்பற்றியது. 
டில்லியில், 22வது லால் பகதூர் சாஸ்திரி பெண்கள் ஹாக்கி (21 வயதுக்குட்பட்டோர்) தொடர் நடந்தது. இதில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி அணிகள் பங்கேற்றன.
பைனல் வாய்ப்பை இழந்த இந்திய அணி, மூன்றாவது இடத்துக்கான போட்டியில் ஆஸ்திரேலியாவை சந்தித்தது. இந்த அணிக்கு எதிராக, ஏற்கனவே நடந்த லீக் போட்டியில் இந்திய அணி "டிரா' செய்திருந்தது. இதனால் இம்முறை வெற்றிபெறும் நோக்கத்துடன் துவக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 
இருப்பினும், புகுகே பெரிஸ் (32வது நிமிடம்) அடித்த கோல் காரணமாக, முதல் பாதியில் ஆஸ்திரேலியா முன்னிலை (1-0) பெற்றது. இரண்டாவது பாதி துவங்கிய சில நிமிடத்தில் (37வது), இந்திய அணியின் கேப்டன் பூனம் ராணி ஒரு கோல் அடித்தார். 41வது நிமிடத்தில் கேட் கில்மோர், ஒரு கோல் அடிக்க, ஆஸ்திரேலியா மீண்டும் முன்னிலை பெற்றது.
இதற்கு அடுத்த நிமிடத்தில் இந்தியாவில் அனுபா பர்லா, ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய இவர், 65வது நிமிடத்தில் தனது இரண்டாவது கோல் அடித்தார். இதையடுத்து இந்திய அணி 3-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.


No comments:

Post a Comment