டில்லி டெஸ்டில் அபாரமாக ஆடிய இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பொறுப்பாக ஆடிய சச்சின், லட்சுமண் அரைசதம் கடந்து அசத்தினர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 304, இந்தியா 209 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 180 ரன்கள் எடுத்தது. பின், 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இந்திய அணி, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 276 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. சுழலில் அசத்திய தமிழக வீரர் அஷ்வின் (9 விக்கெட்), ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட், வரும் 14ம் தேதி கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்குகிறது.

No comments:
Post a Comment