Saturday, November 12, 2011

தென் ஆப்ரிக்கா அபார வெற்றி


ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. கேப் டவுன், நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்துவீசியது. முதல் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 214 ரன் எடுத்திருந்த ஆஸ்திரேலியா, 2வது நாள் ஆட்டத்தில் 284 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. மைக்கேல் கிளார்க் அதிகபட்சமாக 151 ரன் (176 பந்து, 22 பவுண்டரி) விளாசினார். 

தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 24.3 ஓவரில் வெறும் 96 ரன்னுக்கு சுருண்டது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 188 ரன் முன்னிலை பெற்று உற்சாகமாக 2வது இன்னிங்சை தொடங்கியது. ஆனால், யாரு எதிர்பார்க்காத வகையில் அந்த அணி 21 ரன்னுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி விக்கெட்டுக்கு சிடில் & லியான் ஜோடி 26 ரன் சேர்த்து மானம் காத்தது. ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 47 ரன்னுக்கு சுருண்டது. 

அடுத்து 236 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா, 2ம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 81 ரன் எடுத்திருந்தது. 2ம் நாள் ஆட்டத்தில் மட்டும் 23 விக்கெட் சரிந்தது குறிப்பிடத்தக்கது. மூன்றாம் நாளான நேற்று ஸ்மித் 36, அம்லா 29 ரன்னுடன் ஆட்டத்தை தொடர்ந்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஆஸி. வீரர்கள் திணறினர். இருவரும் 2வது விக்கெட்டுக்கு அதிரடியாக 195 ரன் சேர்த்து அசத்தினர். 

அபாரமாக விளையாடிய அம்லா சதம் விளாசினார். அவர் 112 ரன் எடுத்து (134 பந்து, 21 பவுண்டரி) ஜான்சன் வேகத்தில் கிளார்க் வசம் பிடிபட்டார். தென் ஆப்ரிக்கா 50.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 236 ரன் எடுத்து வென்றது. 

கேப்டன் கிரீம் ஸ்மித் 101 ரன் (140 பந்து, 15 பவுண்டரி), காலிஸ் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பரபரப்பான இந்த போட்டியில் 8 விக்கெட் கைப்பற்றிய அறிமுக வீரர் வெர்னான் பிலேண்டர் (தென் ஆப்ரிக்கா) ஆட்டநாயகன் விருது பெற்றார். தென் ஆப்ரிக்கா 1&0 என முன்னிலை வகிக்க 2வது டெஸ்ட் ஜோகன்னஸ்பர்கில் 17ம் தேதி தொடங்குகிறது.

No comments:

Post a Comment