தமிழக காங்கிரசின் மேலிடப் பொறுப்பாளராக இருக்கும் குலாம் நபி ஆசாத், தமிழகத்திற்கு வரும் போது, கட்சியின் முக்கிய தலைவர்கள், சம்பந்தப்பட்ட எம்.பி.,க்களிடம் சொல்லாமல் கொள்ளாமல் வருகிறார். இதுகுறித்து, சோனியாவிடம் நேரடியாக புகார் அளிக்கப் போவதாக எம்.பி.,க்கள் கூறியுள்ளனர்.
தமிழக காங்கிரசின் மேலிடப் பொறுப்பாளராக இருப்பவர் மூத்த காங்., தலைவரான குலாம் நபி ஆசாத். இவர் மத்திய சுகாதார அமைச்சராகவும் உள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த தங்கபாலுவுக்கு இவர் மிக நெருக்கமானவர். குலாம் நபி ஆசாத் தமிழகத்திற்கு வரும் போது, கட்சியின் மூத்த தலைவர்களுக்கோ, எம்.பி.,க்களுக்கோ தெரிவிப்பதில்லை என, புகார் எழுந்துள்ளது.
நேற்று தனியார் கல்லூரி ஒன்றின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக குலாம் நபி ஆசாத், சென்னை வந்தார். இவரது வருகை, அந்த தொகுதியின் எம்.பி.,யாக உள்ள தனக்கு தெரிவிக்கப்படவில்லை என விஸ்வநாதன், மேலிடத்தில் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து குமுறலுடன் அவர் கூறியதாவது:
தமிழக காங்கிரசுக்கு பொறுப்பாளராக இருக்கும் குலாம் நபி ஆசாத், தமிழகத்திற்கு வருகிறார் என்றால், அதுகுறித்த தகவல், கட்சி நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். கட்சிப் பணிக்காக வரவில்லை, தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார் என்றாலுமே கூட, அமைச்சராக அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி அது. அதில், தொகுதி எம்.பி., என்ற முறையில் தகவல் தெரிவித்திருக்க வேண்டும். அழைப்பு என்றில்லா விட்டாலும், அமைச்சரின் வருகை குறித்து அவரது அலுவலகத்தில் இருந்து ஒரு போன் செய்திருக்கலாம். அதுகூட இல்லை.
இன்று இன்னொரு மத்திய அமைச்சர் புரந்தேஸ்வரியும் வரவுள்ளார். அவரும் ஒரு கல்லூரி நிகழ்ச்சிக்காக வருகிறார். அவர் வருவது பற்றியும் எனக்கு தகவல் இல்லை. தாழ்த்தப்பபட்ட வகுப்பைச் சேர்ந்த எம்.பி., என்பதால் இவ்வாறு புறக்கணிக்கின்றனரா என்றும் கூட குழப்பமாக உள்ளது. வரும் குளிர்கால கூட்டத்தொடரின் போது குலாம் நபி ஆசாத், புரந்தேஸ்வரி ஆகிய இருவர் மீதும், சோனியா மற்றும் சபாநாயகர் மீரா குமார் ஆகிய இரண்டு பேரிடமும் புகார் அளிப்பேன். இவ்வாறு விஸ்வநாதன் கூறினார்.
தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா காங்கிரசுக்கும் குலாம் நபி தான் பொறுப்பாளராக உள்ளார். அங்கும் உள்ள கட்சி நிர்வாகிகளும் இதே புகாரை, குலாம் நபி மீது வாசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment