Thursday, November 10, 2011

பெட்ரோல் விலை உயர்வு வாபஸ் இல்லை: மன்மோகன் உறுதி



கடந்த வாரத்தில் உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலை உயர்வு வாபஸ் பெறப்படாது என தெரிவித்ததோடு, எதிர்காலத்தில் பெட்ரோலியப் பொருட்கள் விலை அதிகரிக்காது என, உத்தரவாதம் அளிக்கவும் பிரதமர் மன்மோகன் சிங் மறுத்துவிட்டார்.

பெட்ரோல் விலை கடந்த வாரம் லிட்டருக்கு ரூ.1.80 உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ள நேரிடும்' என்று மிரட்டல் விடுத்தார். அவரது கட்சியைச் சேர்ந்த எம்.பி.,க்களும் நேற்று முன்தினம் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினர். அப்போது, எதிர்காலத்தில் பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்த்தப்படாது என, உத்தரவாதம் தர வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் எம்.பி.,க்கள்கேட்டனர். அதற்கு அவர் மறுத்துவிட்டார். மேலும், சமீபத்திய விலை உயர்வை வாபஸ் பெறவும் வாய்ப்பு இல்லை என்றும் கூறியுள்ளார். அத்துடன், நாட்டின் பொருளாதார நிலவரம் மற்றும் அரசு சந்திக்கும் நிதிப் பிரச்னைகள் குறித்தும் அவர்களிடம் விவரித்து உள்ளார். மம்தா பானர்ஜி மேற்கு வங்க அரசை நடத்திச் செல்கிறார். பெட்ரோலியப் பொருட்கள் விலையில் கை வைத்தால், மத்திய அரசுக்கு மட்டுமின்றி, மாநில அரசுக்கும் பிரச்னை ஏற்படும் என்றும் கூறியுள்ளார். மேலும், பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வுக்கு முன்னதாக, கூட்டணி கட்சிகளின் அமைச்சர்களை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்ற திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.,க்களின் கோரிக்கையையும் அவர் கண்டு கொள்ளவில்லை.

No comments:

Post a Comment