Monday, November 7, 2011

குஜராத் சென்றார் அத்வானி: எல்லையில் வரவேற்றார் மோடி

ஊழலுக்கு எதிராக அத்வானி மேற்கொண்டுள்ள ரத யாத்திரை நேற்று முன்தினம், டையூ- டாமன் யூனியன் பிரதேசம் சென்றடைந்தது.

""அன்னிய நாட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வந்தால், 21ம் நூற்றாண்டு இந்தியாவினுடையதாக இருக்கும். ஊழல் மற்றும் பணவீக்கத்திற்கு எதிராக, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே ரத யாத்திரை மேற்கொண்டுள்ளேன்,'' என தெரிவித்தார்.
இந்நிலையில், அத்வானியின் ரத யாத்திரை, நேற்று குஜராத் சென்றடைந்தது. குஜராத்-டையூ டாமன் எல்லையில், வாபி என்ற இடத்தில் அத்வானியை, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வரவேற்றார்.

குஜராத் மாநிலத்தில் நுழைந்த பின், அங்கு நிருபர்களிடம் பேசிய அத்வானி கூறியதாவது:இந்தியாவில், பார்லிமென்டரி ஜனநாயகம் கடைபிடிக்கப்பட்ட போது, வின்ஸ்டன் சர்ச்சில் உட்பட உலகத் தலைவர்கள் பலரும், நம்மை விமர்சித்தனர். ஆனால், அதன் பின், இந்தியா உண்மையான ஜனநாயக நாடு என்பது நிரூபணமானது.
மத்தியில் ஆட்சியில் உள்ள, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நடக்கும் ஊழல்களால், நாட்டிற்கே அவமானம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பார்லிமென்டரி ஜனநாயகத்தை கடைபிடிக்கும் நம் நாட்டிற்கு, இந்த அவமானத்தைத் தேடித்தந்துள்ளனர்.

மன்மோகன் சிங் பிரதமர் பதவியில் இல்லாத போது, அவரை நான் மிகவும் மதித்தேன். திறமையான, நம்பகமான நபர் எனக் கருதினேன். ஆனால், கடந்த 2008ம் ஆண்டில், பார்லிமென்டில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, அரசை காப்பாற்ற எம்.பி.,க்களுக்கு லஞ்சம் கொடுத்ததால், யாரும் அவரை மன்னிக்க மாட்டார்கள்.குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நல்லாட்சி தருகிறார். மாநிலத்தை ஊழல் இல்லாத மாநிலமாக்கியுள்ளார். நாட்டில் நல்ல நிர்வாகமும், சுயராஜ்யமும் உள்ள ஒரே மாநிலம் குஜராத் மட்டுமே. நரேந்திர மோடியின் தலைமையால் தான் இது சாத்தியமானது.

அன்னிய நாடுகளில் இந்தியர்களால் குவிக்கப்பட்டுள்ள 25 லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வந்தால், இந்திய கிராமம் ஒவ்வொன்றின் மேம்பாட்டிற்கும் 4 கோடி ரூபாய் கிடைக்கும்.இவ்வாறு அத்வானி கூறினார்.அத்வானி ரத யாத்திரை துவக்கும் முன்னர், அவரது யாத்திரைக்கு குஜராத் முதல்வர் எதிர்ப்பு தெரிவிப்பதாக, செய்திகள் வெளியாகின. அவற்றை பொய்யாக்கும் வகையில், நேற்று மாநில எல்லையில், அத்வானியை மோடி வரவேற்றார்.

நரேந்திர மோடிகுஜராத் முதல்வர்:ஊழலும், காங்கிரசும் ஒன்றே. எங்கெல்லாம் ஊழல் பிரச்னை உள்ளதோ. அங்கெல்லாம் காங்கிரஸ் தான் உள்ளது. அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்ற ராஜிவ், போபர்ஸ் ஊழலால் பதவி இழந்தார். குஜராத்தில் ஊழலை பொறுத்துக் கொள்ள மாட்டோம். அதேபோல், நாடும் ஊழலை பொறுத்துக் கொள்ளக் கூடாது. உறுதியாக செயல்பட்டால், ஊழல் இல்லாத ஆட்சியை நடத்தலாம்.

அபிஷேக் சிங்விகாங்கிரஸ் தகவல் தொடர்பாளர்:கறுப்புப் பணத்திற்கு எதிராக, வாய் திறக்கவில்லை என, சோனியாவை குற்றம் சாட்டும் அத்வானி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருந்த போது, ஏன் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வருவது பற்றி பேசவில்லை.தே.ஜ., கூட்டணி ஆட்சியின் போது, ஊழலை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத அத்வானி, சோனியா மவுனமாக இருப்பதாகக் கூறுவது கேலிக்கூத்தானது.

No comments:

Post a Comment