பத்திரப் பதிவுத் துறையில், நிலுவையில் இருக்கும் பத்திரங்களுக்கான முத்திரைத் தீர்வையைச் செலுத்துவதற்கு, சமாதான் திட்டத்தை, தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம், மூன்று மாதங்கள் மட்டுமே அமலில் இருக்கும்.இதுகுறித்து, தமிழக அரசின் பத்திரப் பதிவுத் துறைச் செயலர் சுனீல் பாலீவால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:இந்திய முத்திரைச் சட்டத்தின்படி, சொத்துப் பரிமாற்றம் செய்யும்போது, சொத்தின் சந்தை மதிப்புக்கு ஏற்ப, முத்திரைத் தீர்வை செலுத்த வேண்டும். குறைவான மதிப்புடன் பதிவு செய்யப்படும் ஆவணங்கள், முத்திரைத் தீர்வையை நிர்ணயம் செய்ய, இந்திய முத்திரைச் சட்டப் பிரிவு "47ஏ'வின்படி, சம்பந்தப்பட்ட மாவ ட்ட வருவாய் அலுவலர் அல்லது தனித் துணை ஆட்சியருக்கு அனுப்பப்படுகின்றன.கடந்த ஜூலை வரை, இவ்வாறு 39 ஆயிரத்து 812 ஆவணங்கள் நிலுவையில் இருந்ததால், பதிவு செய்யப்பட்ட ஆவணங்களைத் திரும்பப் பெறுவதில், பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்த ஆவணங்களால், அரசுக்கு வரவேண்டிய வருவாயும் அதிகளவில் முடங்கியுள் ளது.இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கில், நாளை முதல், சமாதானத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி, "47ஏ'வின்படி, நிலுவையாக உள்ள ஆவணங்களை, வழிகாட்டி மதிப்புப்படி செலுத்தப்பட வேண்டிய முத்திரைத் தீர்வைக்கும், ஏற்கனவே செலுத்தியுள்ள தீர்வைக்கும் இடையிலான வேறுபாட்டில், மூன்றில் இரண்டு பங்கை மட்டும் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.கடந்த ஜூலை வரை நிலுவையாக உள்ள ஆவணங்களுக்கு, இத்திட்டம் பொருந்தும். வித்தியாச முத்திரைத் தீர்வையை, சம்பந்தப்பட்ட சார்-பதிவாளர் அலுவலகத்திலேயே செலுத்தலாம். இத்திட்டம், இன்று முதல், மூன்று மாதங்களுக்கு அமலில் இருக்கும். பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு, சுனீல் பாலீவால் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment