பூமியின் தென் துருவத்தில் அமைந்துள்ள அன்டார்டிகா பனி மலைப் பகுதியில் பல நாடுகள் ஆராய்ச்சி மையங்களை அமைத்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியா முதலில் தக்ஷின் கங்கோத்ரி என்ற ஆய்வு மையத்தை கடந்த 1983ம் ஆண்டு நிறுவியது. அந்த ஆய்வு மையம் தற்போது பனியில் புதைந்து விட்டது. கடந்த 1988&89ம் ஆண்டு ‘மைத்ரி’ என்ற ஆராய்ச்சி மையத்தை அன்டார்டிகாவில் நிறுவியது. இது நவீன வசதிகளுடன் இயங்கிவருகிறது.
இந்நிலையில் மைத்ரி நிலையம் அமைந்துள்ள இடத்திலிருந்து 3000 கி.மீ தொலைவில் ‘பார்தி’ என்ற புதிய ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து கடலுக்கு எளிதில் செல்ல முடியும். இது குறித்து கோவாவில் உள்ள அன்டார்டிகா மற்றும் கடல் ஆராய்ச்சி தேசிய மையத் தின் (என்.சி .ஏ.ஓ.ஆர்) இயக்குனர் ரசிக் ரவீந்திரா கூறுகையில், ‘‘புதிய ஆராய்ச்சி மையத் தின் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இரண்டாம் கட்ட பணியை மேற்கொள்ள டாக்டர் ராஜேஸ் அஸ்தானா தலைமையில் இந்தியக் குழுவினர், தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் பகுதியிலிருந்து 26ம் தேதி அன்டார்டிகா பயணம் செய்கின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் புதிய ஆய்வு மைய பணிகள் நிறைவடையும்’’ என்றார்.
எல்லா விதமான தட்ப வெப்ப நிலைகளையும் தாங்கும் விதத்தில் நவீன வசதிகளுடன் இந்த ஆய்வு மையம் அமைக்கப்படுகிறது. இங்கு இந்திய விஞ்ஞானிகள் தங்கி நிலவியல், வானிலை, கடல்ஆராய்ச்சி, கடல் உயிரியில், நுண்ணுயிரியல், சுற்றுச்சூழல் அறிவியல் போன்ற பல பிரிவுகளில் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

No comments:
Post a Comment